Author: admin

  • வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர!

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

    பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

    இதன்போதே எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

    வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

    இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கு வரும்போது இப்பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வோம் எனவும் கூறியுள்ளார்.

  • கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்; கொந்தளிக்கும் மீனவர்கள்

     யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய  இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன.

    சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

    வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

    இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் கட்டைக்காட்டு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்

    வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.

    வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  • யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா

    வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

    இது யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

    ஆகவே மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

    முதலாம் இணைப்பு

    பொத்துவிலுக்கு தென் கிழக்காக சுமார் 580 கிலோமீட்டரில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் இன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரத்தை நெருங்க உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

    நேற்று புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த நான்காம் திகதி இந்தோனேசியாவுக்கு மேற்குப் பக்கமாக வங்களா விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காற்றுச் சுழற்சி உருவாகியது.

    இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

    காற்று சுழற்சி

    குறித்த காற்று சுழற்சியானது ஆறாம் திகதி கிழக்கு மாகாணத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் வேகம் குறைவடைந்து தற்போது நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியுள்ளது.

    இலங்கைக்கு தென்கிழக்காக பொத்துவில் இருந்து சுமார் 550 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மையம் காணப்படுகின்ற நிலையில் இன்று வியாழக்கிழமை எட்டாம் திகதி கிழக்கு மாகாணத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அங்கிருந்து வட மாகாண ஊடாக மன்னார் வளைகுடா அல்லது இந்தியாவின் டெல்டா பிரதேசங்கள் என அழைக்கப்படுகின்ற பகுதிகளுக்கு செல்வதற்கான பாதை வடக்கு ஊடாகவே நகர உள்ளது.

    இலங்கை வரலாற்றில் வடகீழ் பருவக்காற்று காலங்களில் இவ்வாறான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலும் 21 வது தடவையாக இந்த நிலை உருவாகியுள்ளது.

    2021 ஆம் ஆண்டு இவ்வாறான நிலையொன்று வங்களா விரிகுடாவில் ஏற்பட்டபோது அது இலங்கையை பாதிப்புக்கு உட்படுத்தாமல் இந்தியாவின் தென்கிழக்கு மாகாணங்களை அதிகம் பாதித்தது.

    தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் நகரும் பாதை 1906 மற்றும் 1908 ஆம் ஆண்டுகளில் உருவான பாதையை ஒத்ததாக அமைந்துள்ளமை சற்று கவனிக்க வேண்டிய விடயம்.

    கன மழை கிடைக்க வாய்ப்பு  

    வடக்கு கிழக்கு வடமத்திய உவா மாகாணங்களில் கன மழை கிடைக்க வாய்ப்புள்ள வடக்கு மாகாணத்தில் சுமார் 600 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.

    யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - நாகமுத்து பிரதீபராஜா | Meteorology Department New Cyclone Warning

    கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 8,9,10 ஆம் திகதிகள் அவதானத்துடன் இருப்பதோடு யாழ்ப்பாணம் 9,10 ,11,12 திகதிகளும் முல்லைத்தீவு 8 ,9 ,10 திகதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

    தற்போது உருவாகியுள்ள தாழ்வு நிலை புயலாக மாற்றம் பெறாத நிலையில் கிழக்கு மாகாணத்தை அடைந்த நிலையில் புயலாக மாறக்கூடிய தன்மைகள் காணப்படுகிறது.

    ஆரம்பத்தில் ஒரு காற்றுச் சுழற்சி வளிமண்டல மேல் சுழற்சியாக மாறும் பின்னர் காற்று சுழற்சி தாழ்வு நிலையாக மாறி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்.

    அதன் பின்னர் நன்கு உணர்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி பின் புயலாக மாறுவதே வழமையான செயற்பாடு.

    காற்றின் வேகம் அதிகரிக்கும் 

    கிழக்கு மாகாணத்தை ஏற்கனவே வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மணிக்கு ஒன்பது கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்வதன் காரணமாக இன்றைய தினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமையே கிழக்கு கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலில் கிடைக்கப் பெற்ற மழைவீழ்ச்சியை விட அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் காற்றின் வேகம் உள் நிலப்பகுதிகளில் 40-45 கிலோமீட்டர் வேகத்திலும் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறித்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் பாதை வடக்கு மாகாணம் ஊடாக அமையப்பெற்றுள்ளதால் வடக்கின் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுவதற்கான எதிர் கூறல் விடப்படுகிறது.

    கடற்தொழிலாளர்கள் ஒன்பதாம் திகதிக்கு பின்னர் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது ஏனெனில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  • அம்பாறையில் 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

    கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

    அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார்.

    அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

    இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

  • யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு 

    யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

    யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

    மேலும் தெரிவிக்கையில்,

    வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது.

    அதனால் தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் திகதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.

    யாழ்ப்பாணம் மாவட்ட செயலரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    அதில் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.

    வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.

  • பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர உத்தரவு!

    பதுளை மாவட்டத்திற்குள் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    வளிமண்டலவிலவியல் திணைக்களத்தின் அண்மைய வானிலை முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்ட சிறப்பு மண்சரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

    இன்றைய (09) பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது.

    இன்றைய சபை நடவடிக்கைகளில், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களும்,மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்களும்,மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களும்,மு.ப. 11.30 – பி.ப. 3.00 கடை அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதியும்  அங்கீகரிக்கப்படவுள்ளது.

    பி.ப. 3.00 – பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளும் அங்கீகரிக்கப்படவுள்ளன அத்துடன் பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுளள்ளது

  • க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அப்டேட்!

    நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை – சபை முதல்வர்

    பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை அளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான விவாதங்களை தீர்மானிக்கும் “நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்” ஏன் இந்த வாரம் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்த பிமல் ரத்நாயக்க, இரண்டு முக்கிய சட்டவாக்கங்கள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக அரசு காத்திருப்பதாகக் கூறினார். அத்துடன், எதிர்க்கட்சியினர் தயாரித்து வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிலையியற் கட்டளைகளின்படி முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதால், அதனையும் கருத்திற் கொண்டு கூட்டத்தை நடத்த அரசாங்கம் காத்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.

    நாடாளுமன்ற அமர்வு நாட்களிலேயே விவகாரக் குழுக் கூட்டத்தை நடத்துவதுதான் வழமையான நடைமுறை என்று சுட்டிக்காட்டிய கயந்த கருணாதிலக்க, விவாதங்களுக்குத் தயாராவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், விவகாரக் குழுக் கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்று பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.

  • குறைந்த காற்றழுத்த தொடர்பில் எச்சரிக்கை!

    இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    காற்று:

    காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.

    காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும்.

    பேருவளையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும்.

    கடல் நிலை:

    காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

    பேருவளையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.

    தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.

    காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அலை உயரம் (சுமார் 2.5 – 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் (இது நிலப்பகுதிக்கானது அல்ல).