விளையாட்டு

2022 நவம்பர் 21 அன்று கட்டாரில் கால்பந்து உலகக் கிண்ணம்

2022 கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரை கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளை நடத்திய நாடுகளிலேயே மிகச்சிறியது கத்தார் தான். இதற்கு முன்பு கட்டாரை விட 3 மடங்கு பெரிய நாடான ஸ்விட்சர்லாந்து 1954 இல் உலகக் கிண்ணத்தை நடத்தியது. ஆனால் அப்போது 16 அணிகளே பங்கேற்றன. இப்போது 32 அணிகள் பங்கேற்கவுள்ளன.

28 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கட்டார், கால்பந்து உலகக் கிண்ணத்ததை நடத்தும் முதல் அரபு நாடாகும்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2018 இல் ரஷ்யாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7 வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தை வென்றது. குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

டோஹாவுக்குச் சமீபத்தில் சென்றேன். அப்போது உலகக் கிண்ணத்தை கட்டார் எந்தளவுக்குத் தயாராகி வருகிறது என்பதை நேரில் கண்டறிந்தேன். நிச்சயம் ரசிகர்களுக்குப் புதுவித அனுபவம் கிடைக்கும். மிகச்சிறந்த உலகக் கிண்ணத்தை காணும் வாய்ப்பை கட்டார் உருவாக்கும் என்று ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.