விளையாட்டு

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்திற்கான சம்பியனாக மகுடம் சூடியது ஜப்னா ஸ்டாலியன்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை 53 ஓட்டங்களால் வீழ்த்தி லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்திற்கான சம்பியன்களாக மகுடம் சூடியிருக்கின்றது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு கிங்ஸ் அணியினை வீழ்த்திய கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும், தம்புள்ள வைகிங் அணியினை வீழ்த்திய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் சம்பியன் கனவுகளுடன் களமிறங்கியிருந்தன.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றுக் கொண்டார்.

இப்போட்டிக்கான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்க, கோல் கிளேடியேட்டர்ஸ் தமது வீரர்கள் குழாத்திற்குள் ஷானக்க ருவன்சிறிக்குப் பதிலாக அதிரடி துடுப்பாட்ட வீரரான ஹஸ்ரத்துல்லா சஷாயினை உள்வாங்கியிருந்தது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாந்து, ஜொன்ஸன் சார்ல்ஸ் (WK), சொஹைப் மலிக், திசர பெரேரா (C), வனிந்து ஹசரங்க, சரித் அசலங்க, டுவானே ஒலிவியர், தனன்ஜய டி சில்வா, சுரங்க லக்மால், சத்துரங்க டி சில்வா, உஸ்மான் சின்வாரி

கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணதிலக்க, ஹஸ்ரத்துல்லா சஷாய், பானுக ராஜபக்ஷ (C), தனன்ஜய லக்ஷான், அசாம் கான் (WK), அஹ்சன் அலி, செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், செஹான் ஆராச்சிகே, நுவன் துஷார 

நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று கிடைத்திருந்தது. எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்த ஜொன்சன் சார்ள்ஸ் தனுஷ்க குணத்திலக்கவின் அபார பிடியெடுப்போடு தனன்ஜய லக்ஷானின் பந்துவீச்சில் 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஜொன்சன் சார்ள்சினை தொடர்ந்து ஏனைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்துவின் விக்கெட்டும் அவர் 27 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிபோனது.

பின்னர், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தமது மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியான ஓட்டப்பங்களிப்போடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சொஹைப் மலிக் 35 பந்துகளுக்கு 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணித்தலைவர் திசர பெரேரா வெறும் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக தனன்ஜய லக்ஷான் 3 விக்கெட்டுக்களையும், சஹான் ஆராச்சிகே, லக்ஷான் சந்தகன் மற்றும் மொஹமட் ஆமீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 189 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் ஹஸ்ரத்துல்லா சஷாய் ஆகியோர் வந்தனர்.

இந்த வீரர்களில், ஹஸ்ரத்துல்லா தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் தனன்ஜய டி சில்வாவிடம் தனது விக்கெட்டினைப் பறிகொடுக்க ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க ஒரு ஓட்டத்துடன் துரதிஷ்டவசமான ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே சரிவு ஒன்று ஏற்பட்டது.

அடுத்த வீரராக வந்த அஹ்சன் அலியும் ஏமாற்றம் தந்தார். அதனால், கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து மோசமான நிலையில் காணப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்காக அணித்தலைவர் பானுக்க ராஷபக்ஷ மற்றும் இளம் வீரர் அசாம் கான் ஆகியோர் போராட்டம் காண்பித்திருந்தனர். எனினும், இந்த இரண்டு வீரர்களது போராட்டமும் வீணாக இறுதியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியை தழுவியது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் பானுக்க ராஜபக்ஷ வெறும் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில், அசாம் கான் 17 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 36 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சொஹைப் மலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

முக்கிய விருதுகளை வென்றவர்கள்  

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் – சொஹைப் மலிக் (ஜப்னா ஸ்டாலியன்ஸ்)

தொடரின் வளர்ந்துவரும் வீரர் – தனன்ஜய லக்ஷான் (கோல் கிளேடியேட்டர்ஸ்)

தொடர் நாயகன் – வனிந்து ஹஸரங்க (ஜப்னா ஸ்டாலியன்ஸ்)