இலங்கை விளையாட்டு

126 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்போது இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும், தில்ருவன் பெரேரா 67 ஓட்டங்களையும் மற்றும் தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 6 விக்கெட்களையும் மார்க் வூட் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்ளை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 186 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் லசித் எம்புல்தெனிய 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி, முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் அதிக பட்ச ஓட்டங்களாக லசித் அம்புல்தெனிய 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் டெமின் பெஸ் மற்றும் ஜெக் லீச் தலா 4 விக்கெட்களையும் அணித்தலைவர் ஜோ ரூட் 2 விக்கெட்களையம் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.