இலங்கை உலகம்

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரணமாகின்றன என அவர் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்.

ஹார்மோன் உற்பத்தி செய்யும் எண்டோகிரைன் அமைப்பைப் பாதிக்கும் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்யும் போது பயன்படுத்தப்படும் வேதியியல், பித்தலேட்டுகளின் விளைவாக கருவுறுதல் விகிதத்தில் மனிதகுலம் ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாசுபாட்டின் விளைவாக, பிறக்கும் குழந்தைகள் சிறிய ஆண்குறியுடன் பிறக்கிறார்கள் எனவும் வைத்தியர் ஸ்வான் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எலிகளில் காணப்பட்ட பித்தலேட் நோய்க்குறியை ஆராய்ச்சி செய்ததன் மூலம், கருக்கள் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்போது அவை சுருங்கிய பிறப்புறுப்புகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கை மிகவும் நெகிழ்வானதாக மாற்றுவதில் பித்தலேட் என்ற வேதிப்பொருளுக்கு ஒரு தொழில்துறை பயன்பாடு உள்ள நிலையில், அது மனித வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பித்தலேட்டுகள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனைப் பிரதிபலிக்கின்றன. இதனால் மனித உடலில் இயற்கையான ஹார்மோன்களின் உற்பத்தியை அவை சீர்குலைக்கின்றன என ஷன்னா ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரோக்கியமான ஆண்கள் சம்பந்தப்பட்ட 185 ஆய்வுகளை ஆராய்ந்த பின்னர், கடந்த நான்கு தசாப்தங்களில் மேற்கத்தேய நாடுகளில் ஆண்களிடையே விந்தணுக்களின் அளவு 50 வீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், கருவுறுதல் விகிதம் வேகமாகக் குறைந்து வருவதால் 2045 இற்குள் பெரும்பாலான ஆண்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது என வைத்தியர் ஸ்வான் எச்சரிக்கையை விடுத்துள்ளார்