விளையாட்டு

எஃப்.ஏ கிண்ண தொடர்: ஐந்தாவது கட்டப் போட்டிகளின் முடிவுகள்

உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டித் தொடரான எஃப்.ஏ கிண்ண தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்துவரும் இப்போட்டித் தொடரில், தற்போது ஐந்தாவது கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், டோட்டன்ஹாம் அணியும் நோர்விச் சிட்டி அணியும் மோதிக் கொண்டன.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், பெனால்டி சூட் அவுட் முறையில் நோர்விச் சிட்டி அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

முன்னதாக டோட்டன்ஹாம் அணி சார்பில், ஜோன் வெர்டோங்கேன் 13ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், நோர்விச் சிட்டி அணி சார்பில் ஜோசிப் டிராமிக் 78ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

கிங் பவர் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், லெய்செஸ்டர் அணியும் பர்மிங்காம் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், லெய்செஸ்டர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் லெய்செஸ்டர் அணி சார்பில், ரிக்கார்டோ பெரேரா 82ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஹில்ஸ்போரோ விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், மன்செஸ்டர் சிட்டி அணியும் ஷெஃபீல்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், மன்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் மன்செஸ்டர் சிட்டி அணி சார்பில், செர்ஜியோ அகுவெரோ 53ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.