விளையாட்டு

IPL புள்ளிகள் பட்டியலில் பின்தங்கிய பிரபல அணிகள்!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 9 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது.

ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

ஆரம்பத்தில் ஓட்டம் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் தெவாதியா, தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே இரு வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஹைதராபாத் தவிர மற்ற எல்லா அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்றுள்ளன.

பிரபல அணிகளாகக் கருதப்படும் கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய அணிகள் புள்ளிகள் பட்டியலில் கடைசி 4 இடங்களைப் பிடித்துள்ளன.