Category: Uncategorized

  • எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி

    தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்றது.

    இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

    நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட  பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் “போதைப்பொருள் அற்ற நாடு –  மகிழ்ச்சியான நாளை” என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது.

    போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

    2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1821.174kg ஹெரொயின், 3865.710kg ஐஸ், 17189.377kg கஞ்சா, 38.958kg கோகேன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

    கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

    போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

    இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

    மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

    No photo description available.

    மல்வத்து தரப்பின் அனுநாயக்க வண, நியங்கொட விஜிதசிறி, அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க வண, நாரம்பனாவே ஆனந்த, ராமன்ய மகா நிகாயவின் அனுநாயக்க வண, வலேபொட குணசிறி, வண, குப்பியாவத்தை போதானந்த, ஆகிய தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் அருட் தந்தை நிஷாந்த பெர்னாண்டோ, ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், ஷேக் முகமது அர்கம் நூராமித் மௌலவி உட்பட மதத் தலைவர்கள், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  • யாழ். மாவட்ட அரச அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் – பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

    யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் எழுவைதீவு பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.

    எழுவைதீவு  ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

    மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

    தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார்.

    அத்தோடு அண்மையில் ஏற்பட்ட  “டித்வா” புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில்  சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரச அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

    இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளக கணக்காய்வாளர், உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

    அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில் தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

    அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    அரச அதிகாரிகள்

    ஏனைய இழப்பீடுகளை வழங்குவதற்காக அரச அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களில் கம்பஹா மாவட்டத்தில் 73.4 சதவீதத்தினருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05 சதவீதத்தினருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05 சதவீதத்தினருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68.39% சதவீதத்தினருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 65.28 சதவீதத்தினருக்கும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 61.42 சதவீதத்தினருக்கும் இதுவரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல் | School Reopening Date Moe Department Announcement

    சில மாவட்டங்களில் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாகவும் இந்நிலையைத் துரிதப்படுத்த அதிகாரிகள் தற்போது தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    அத்தோடு, இது தொடர்பான சிக்கல்களைக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • வடக்கில் 290 ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து!

    வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை கைவிடுவதாக வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பில் நடைபெற்ற வழங்கில் மாகாண கல்வி திணைக்களம் வட மாகாண கல்வி அமைச்சு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இட மாற்றத்தை கைவிடுவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த நிலையில் வழக்கு முடிவுறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கூறியுள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதியை இடமாற்ற பட்டியலில் பாரபட்சம் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தெளிவுபடுத்தியிருந்து.

    இடமாற்ற பட்டியல்

    குறித்த இடமாற்றப்பட்டியலை உரிய நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்த நிலையில் எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    வடக்கில் 290 ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து! | Cancel The Transfer Of 290 Teachers In The North

    இந்நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மூன்று நாட்களாக மேற்கொண்டமை அனைவரும் அறிந்த விடயம்.

    எமது நியாயமான கோரிக்கையை வடமாகாண ஆளுநர் நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது.

    நீதிமன்றத்தில் வடமாகாண கல்வி அமைச்சு மாகாண கல்வி திணைக்களம் உரிய விளக்கங்களை உரிய காலப்பகுதியில் வழங்காத காரணத்தினால் வழக்கு இழுபடும் நிலை ஏற்பட்டது.

    இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கானது விசாரணைக்காக திகதியிடப்பட்ட போதும் நீதிபதி விடுமுறையில் இருந்த காரணத்தினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நியாயமான கோரிக்கை

    இதன்போது மாகாண கல்வி திணைக்களம் வட மாகாண கல்வி அமைச்சு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வெளியிடப்பட் சேவையின் தேவை கருதிய இட மாற்றப் பட்டியலை கை விடுவதாக மன்றுக்கு அறிவித்த நிலையில் வழக்கு நிறைவுக்கு வந்தது.

    ஏற்கனவே நாம் கூறியது போன்று எமது நியாயமான கோரிக்கையை மாகாண ஆளுநர் வைத்திருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆகவே ஆளுநரிடம் பெற வேண்டிய நீதியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

  • கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

    மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் இன்று (17) மாலை 4:00 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.

    மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடர்பான குழாய்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

    அதன்படி, இன்று (17) மாலை 4:00 மணி முதல் நாளை (18) காலை 7:00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

  • சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

    கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    காற்று :

    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

    கடல் நிலை:

    கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

  • இலங்கை வானில் நிலவிய பதட்டமான நேரங்கள்; பாதுகாப்பாக தரையிறங்கிய துருக்கிய விமானம்!

    கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் (TK 733), தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து இன்று (17) அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

    துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட அவசர சூழ்நிலை இருந்தபோதிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏனைய விமானங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழப்பு தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்தான்புல்லுக்கு திட்டமிடப்பட்ட சேவையை இயக்கும் ஏர்பஸ் A330 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக அவசர தரையிறக்கத்திற்கு முன்னதாக எரிபொருளை எரிக்க காற்றில் வட்டமிட்டது.

    தரையிறங்களுக்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசர குழுக்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    விமானக் குழுவினர் நிலையான அவசர நெறிமுறைகளைப் பின்பற்றி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.

    பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

  • இலங்கையை வந்தடைந்த 500,000 யூரோ பெறுமதியான உதவிப் பொருட்கள்!

    ஜெர்மனி, லக்சம்பேர்க்கில் இருந்து சுமார் 500,000 யூரோக்கள் பெறுமதியான 69,000 கிலோ கிராம் பேரிடர் நிவாரண மனிதாபிமான உதவிகளுடன் சிறப்பு சரக்கு விமானம் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட இந்த உதவிப் பொருட்களில், கூடாரங்கள் மற்றும் அவசரகால தங்குமிடங்கள், உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கும்.

    மனிதாபிமான உதவியை அதிகாரப்பூர்வமாகப் பெறுவதற்காக இலங்கைக்கான ஜெர்மனியின் துணைத் தூதர் சாரா ஹாசல்பார்த், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் டிரிபன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அதிகாரிகள் விமான நிலையத்தில் உடனிருந்தனர்.

    Related

  • முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றமையால் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே முத்துஐயன்கட்டுகுளத்தின் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ரேடியல் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு வெளியிட்ட அறிவிப்பில், நயினாமடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால், முத்துஐயன்கட்டு குளத்தின் ரேடியல் கதவுகள் தொடர்ச்சியாக திறந்த நிலையில் வைக்கப்படும்.

    இதன் காரணமாக, கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மன்னாகன்டல் – வசந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning Issued For Mullaitivu District Dmc

    நீர்மட்டம் உயர்வதை கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளர் அவர்களுக்கு தகவல் வழங்கி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.

    அதேபோன்று, பண்டாரவன்னி பகுதிகளில் வசிக்கும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும். வவுனியா வடக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குறிவிச்சை ஆற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    நீர்மட்டம் உயர்வதை நீங்கள் கவனித்தால், உடனடியாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் அவர்களுக்கு தகவல் வழங்கி,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

    கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    காற்று :

    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

    கடல் நிலை:

    சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.