வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை:

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *