Blog

  • அனர்த்த காலங்களில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

    நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித உயிர்களை பாதுகாப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துரித நிவாரணம் வழங்குவதும் அரசியல் வட்டாரங்களின் முதன்மைக் கடமையாக ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை முரண்பாடுகளும் இயல்பானவையே. ஆனால், மக்களின் உயிர் மற்றும் வாழ்வு ஆபத்தில் உள்ள இந்த வேளையில் எந்த அரசியல் சிந்தனையும் முதன்மை அல்ல; மனிதநேயம் மட்டுமே முதன்மை. எனவே, தற்போதைய அவசர சூழலில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தேசியப் பொறுப்பாகும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமடைய, அவசர நிவாரணம் முறையாகப் பகிர்ந்தளிக்க, சுகாதாரம், குடிநீர், தங்குமிடம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் உடனடி தீர்வுகள் காண, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒற்றுமையான பங்களிப்பு நாட்டுக்கு மிக அவசியமாக உள்ளது. மக்கள் தேவைகளை முன்னிறுத்தி, புறக்கணிப்போ, விமர்சன அரசியல் போக்கோ இல்லாமல் ஒருங்கிணைந்த செயற்பாடு மட்டுமே நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்கக் கூடிய வழி.

    எதிர்க்கட்ச்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டான நவம்பர் 12ம் திகதிய வானிலை அவதான நிலைய அறிவுறுத்தலுக்கமைய அணைகள் மற்றும் குளக்கட்டுக்களை திறந்துவிட்டு அனர்த்த ஆபத்தை குறைத்திருக்கலாம் என்ற நியாயமான கருத்துக்கள் இருந்த போதிலும் நடந்தவற்றை பேசிக்கொண்டிராமல் முன்னோக்கி பயணிக்க நாம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

    ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளையும், சமூக அமைப்புகளையும், தன்னார்வ இயக்கங்களையும், குடிமக்களையும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறது. நாம் ஒரே தேசத்தின் பிள்ளைகள்; அனர்த்தத்தை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய கட்டாயப் பொறுப்பு உள்ளது. மக்களின் பாதுகாப்பும் நலனும் அரசியலுக்கு மேல். நாடு சிக்கலில் இருக்கும் போது ஒற்றுமை மட்டுமே நம் பலம் என தனது ஊடக அறிக்கையில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

  • அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

    நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

    அதன்படி, A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி , A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி, AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி , AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி , AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன, வீதிப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுக்களும் கள உத்தியோகத்தர்களும் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

    இதேவேளை, தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

    இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உறுதியளித்துள்ளார்.

    ஹொங்கொங்கில் மனிதாபிமான முயற்சிகளுக்கு அதன் திட்டமிடப்பட்ட பங்களிப்புகளை அறிவித்த ஒரு வாரத்திற்குள், ஆப்பிள் இப்போது அண்மைய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளிக்கும்.

    இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடங்கும். 

    இந்த நாடுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மொத்தம் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

    இந்த ஆப்பிள் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செவ்வாய்க்கிழமை (02) ஒரு சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார். 

    அதில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக ஐபோன் தயாரிப்பாளர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட நாடுகளில் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

    மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்தும்ள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செயது வருகிறது.

    2025 ஒக்டோபரில், மெலிசா சூறாவளிக்குப் பின்னர் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை அளிப்பதாக நிறுவனம் அறிவித்தது. 

    2025 மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் இதேபோல் நன்கொடை அளித்தது.

    2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பணம் மற்றும் வளங்களை அனுப்பியது.

    2022 மார்ச் மாதம் உக்ரேனில் நடந்து வரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆப்பிள் நிறுவனம் யுனிசெஃப் உடன் இணைந்து பணியாற்றியது. 

  • தேசிய துக்க தினத்தை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

    அண்மைய பெரும் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு ஒரு தேசிய துக்க தினத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

    இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

    இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மரியாதை செலுத்த குறைந்தது செய்ய வேண்டிய ஒன்றாவது இதுதான் — ஒரு துக்க தினத்தை அறிவிக்க வேண்டும்.

    பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது நமக்கு கடவுள் அளித்த புனித கடமை எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையில், இலங்கையின் கடினமான இந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய அனைத்துநாடுகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.  

  • வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய ரூ.25,000 உதவி – பிரதமரால் வழங்கிவைப்பு

    வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் ரூ.25,000 நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (02) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. 

    கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக இவ்வாறு நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது. 

    சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  • பதுளையில் தீவிர மீட்பு பணியில் இறங்கியுள்ள இந்திய படையினர்!

    இந்தியாவிலிருந்து மீட்பு பணிகளுக்காக இலங்கையை வந்தடைந்த குழுவினரின் ஒரு பகுதியினர் இன்று (03.12.2025) பதுளையில் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    “டித்வா” புயல் காரணமாக நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகள் தொடர் மண்சரிவுகள் பதிவாகியிருந்தன. 

    இவ்வாறு ஏற்பட்ட தொடர் மண்சரிவுகளால் பலரும் உயிரிழிந்த நிலையில், பலர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் அறியக் கிடைக்கவில்லை.

    இவ்வாறான பின்னணியில், இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறிந்து, இந்தியா பல உதவிகளை செய்து வருகின்ற நிலையில் இந்திய விசேட மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி, இன்று (03.12.2025) பதுளையில் மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • இன்று முதல் சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் வழமைக்கு

    கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இனிவரும் காலங்களில் தடையின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

    அந்தவகையில், சாரதி அனுமதிப்பத்திர அனைத்து சேவைகளும் இன்று (03) முதல் வழமை போல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

    அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் (Online மற்றும் Offline) சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இன்று (03) முதல் வழமைபோல இடம்பெறும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    எவ்வாறாயினும், முறைமை தடைப்பட்ட நாட்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த மக்களின் வசதிக்காக முன்னர் அறிவிக்கப்பட்ட பின்வரும் விசேட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்: எழுத்துப் பரீட்சை (Written Exams): முறைமைக் கோளாறு மற்றும் வானிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்ட பரீட்சைகள், பின்வரும் புதிய திகதிகளில் நடைபெறும்: 2025.11.27 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.08 அன்று நடைபெறும். 2025.11.28 அன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் – 2025.12.09 அன்று நடைபெறும். (இந்தப் பரீட்சைகள், உங்களின் நேரம் ஒதுக்கப்பட்ட ஆவணத்தில் (Booking Document) குறிப்பிடப்பட்டுள்ள அதே நேரத்திலேயே நடைபெறும்.)

    தவறவிடப்பட்ட நேர ஒதுக்கீடுகள் (Appointments): முறைமை தடை ஏற்பட்ட 2025.11.27, 28 மற்றும் 2025.12.01, 02 ஆகிய தினங்களில் நேர ஒதுக்கீடு செய்திருந்த சேவையாளர்கள், அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கத்தின் எந்தவொரு வேலை நாளிலும் வருகை தந்து தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

    இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

    எதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசணையை முன்மொழிந்திருந்தார்.

    நாட்டில் கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஐநூறை நெருங்கியுள்ளது.

    இவ்வாறான பின்னணியில், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியது. 

    இதன்போது, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. 

    எனினும், அன்றைய தினம் மதியம் 12.30 வரை மாத்திரமே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட அனுமதிக்க முடியும் என அரசாங்க தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

    அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் இன்றைய தினத்துக்கு (03.12.2025) ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • உயர்தர பரீட்சை விடைத்தாள்களின் நிலை…! பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

    உயர்தர பரீட்சை விடைத்தாள்களின் நிலை...! பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு | Department Of Examination Abt Gce Al Examination

    இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

    உயர்தர பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

    மேலும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும்பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    இது பல ஆண்டுகளாக சரியாக நடந்துவரும் ஒரு நடைமுறை. காலநிலை நிலைமைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருகிறோம்  என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.

    அத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்துத் தடைகள், தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என நாலக கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.

  • அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இந்தக் கூட்டத்தை அறிவித்தார்.

    அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.